×

வல்லநாடு மலை பகுதியில் புதிய வகை பல்லி இனம் கண்டுபிடிப்பு: குவார்ட்சைட் புரூக்கிஷ் கெக்கோ வகையை சேர்ந்தது

செய்துங்கநல்லூர்: வல்லநாடு மலை பகுதியில் குவார்ட்சைட் புரூக்கிஷ் கெக்கோ வகையை சேர்ந்த புதிய வகை பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தற்போது கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் இது தமிழ்நாட்டிற்குச் சொந்தமான 7வது இனமாகும். மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் தேஜஸ் தாக்கரே தலைமையில் தாக்கரே வைல்டு லைவ் பவுண்டேசன் என்ற அமைப்பு இயங்கி வருகிறது.

இந்த அமைப்பு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல்லுயிரினங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு மலைப் பகுதியிலும், கோவில்பட்டி அருகே உள்ள குருமலை காப்புக்காடு பகுதியிலும் ஆய்வு நடத்திய இந்த அமைப்பு புதிய வகை பல்லி இனத்தை கண்டுபிடித்து உள்ளது. இந்த மலைகளில் உள்ள புதர்கள் வாழ்விடங்களில் புதிய வகை கெக்கோ ஹெமிடாக்டைலஸ் குவார்ட் சிடிகோலஸ் எனப்படும் பல்லி இனம் கண்டறியப்பட்டு உள்ளது. புதிய கெக்கோவிற்கு ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்பட்ட பொதுவான பெயர் குவார்ட்சைட் புரூக்லிஷ் கெக்கோ அல்லது தூத்துக்குடி புரூக்கிஷ் கெக்கோ ஆகும். மும்பை தாக்கரே வனவிலங்கு அறக்கட்டளையை சேர்ந்த அக்‌ஷய் கந்தேகர், தேஜஸ் தாக்கரே, சத்பால் கங்கல்மாலே, விவேக் வாகே, ஸ்வப்னில் பவார், இஷான் அகர்வால், நெல்லையை சேர்ந்த ஊர்வன பாதுகாப்பு ஆய்வாளர்கள் ராமேஸ்வரன் மாரியப்பன் ஆகியோர் இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஊர்வன ஆய்வாளர் ராமேஸ்வரன் கூறியதாவது:
தேஜஸ் தாக்கரே தலைமையில் 5 ஆராய்ச்சியாளர் கொண்ட குழுவினர், கடந்த ஏப்ரல் மாதம் வல்லநாடு காப்புக்காடு மற்றும் கோவில்பட்டி குருமலை காப்புக்காடுகளில் ஆய்வு செய்தோம். அப்போது கெக்கோ ஹெமிடாக்டைலஸ் குவார்ட் சிடிகோலஸ் பல்லியை கண்டறிந்து உள்ளோம். ஜெயபார்வதி அம்மன் கோயில், வல்லநாடு காப்புக்காடு, மணக்கரை மற்றும் குருமலை காப்புக் காட்டில் உள்ள பெருமாள் கோயில் அருகே இந்த புதிய இனத்தை கண்டுபிடித்தோம். இந்த குவார்ட்சைட் புரூக்கிஷ் கெக்கோ பல்லி இனங்கள், பல்வேறு அம்சங்களில் தனித்தன்மை வாய்ந்தது. முதுகுச் செதில்கள், முன்குளோகல் – தொடை துளைகளின் எண்ணிக்கை மற்றும் அமைப்பு, நடுப்பகுதியில் உள்ள முதுகு டியூபர்கிள் வரிசைகளின் எண்ணிக்கை, மனுஸ் மற்றும் பெஸ்களின் மற்றும் இலக்கத்தின் கீழ் உள்ள லேமல்லேகளின் எண்ணிக்கை கொண்டுள்ளது. இந்த புதிய இனங்கள் இந்திய ஹெமிடாக்டைலஸில் மிகவும் அடர்த்தியாக நிரம்பிய டியூபர்கிள்களைக் கொண்டுள்ளன.

ஆசிரியர்களின் கூற்றுப்படி, தூத்துக்குடி புரூக்கிஷ் கெக்கோ இந்தியாவில் காணப்படும் ஹெமிடாக்டைலஸின் 53வது இனமாகும், மேலும் தற்போது கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குச் சொந்தமான 7வது இனமாகும். இந்தியக் கதிர்வீச்சின் 37 ஹெமிடாக்டைலஸ் இனங்கள், இப்போது தீபகற்ப இந்தியாவில் மட்டுமே உள்ளன. இதில் 10 மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், 2 கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும், 25 தீபகற்ப இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ளன. வல்லநாடு மலையில் தூத்துக்குடி புரூக்கிஷ் கெக்கோக்கள் ஏராளமாக உள்ளன. குருமலையில் குறைவாகவே காணப்படுகின்றன. தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் முத்து செதில் பல்லி என பெயரும் வைக்கப்பட்டுள்ளது, என்றார். ஊர்வன ஆய்வாளரான ராமேஸ்வரன், பாம்புகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டவர். தமிழகத்தின் பாம்புகள் என்ற நூலை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வல்லநாடு மலை பகுதியில் புதிய வகை பல்லி இனம் கண்டுபிடிப்பு: குவார்ட்சைட் புரூக்கிஷ் கெக்கோ வகையை சேர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Vallanadu Mountain region ,Village Mountain Area ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்